லக சமுதாயமே மவுன சாட்சியாக வேடிக்கை பார்த்ததால், ஈழ மக்கள் இனப்படுகொலைக்குள்ளாகி, இன்னமும் வாழ்வுரிமை பெற முடியாதவர்களாக தவிக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த "சமூக சிற்பிகள்' அமைப்பு போர்க்குற்றம் நடந்த அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பிறந்து, வளர்ந்து, போரை எதிர்கொண்ட 21 பேர் எழுதிய அனுபவக் கதைகள் கொண்ட "மௌன வலிகளின் வாக்குமூலம்'’என்ற நூலை தொகுத்துள்ளது. தமிழகத்தில் நக்கீரன் இதனை வெளியிட, அதன் அறிமுகவிழா சென்னை கவிக்கோ அரங்கில் மார்ச் 30-ந் தேதி நடந்தது.

Advertisment

book-release

bookrelease

ஈழத்தில் போர் நடந்த நாட்களில் தமிழர்கள் அடைந்த துன்பங்கள் குறித்த செவிவழிச் செய்திகள் ஏராளம். அந்த வலிகளை அனுபவப்பூர்வமாக எடுத்துச் சொன்னார் ஈழ சகோதரி ஜெயப்பிரசாந்தி. "அலைவந்து தாலாட்டும் சிறு தீவாம் எம் இலங்கை திருநாட்டில் தமிழராய் பிறந்த ஒரே காரணத்திற்காக அகதிகளாக ஆக்கப்பட்டு அவலப்படுத்தப்பட்ட அபலைகளில் நானும் ஒருத்தி. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்கிறீர்கள். நாங்களும் எண்ணிக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் சராசரி குடிமக்கள்போல வாழ இயலாது. பூனை தன் குட்டிகளை கவ்வுவதுபோல ஆளுக்கொரு பையுடன் நாளுக்கொரு இடமாறி இடமாறி இடம்பெயர்ந்து அலைந்தோம். இடையிலே போர் ஓயும் சில காலங்களில் மீண்டும் சொந்த மண் திரும்பி உடைந்த வீட்டினை நிமிர்த்த முனைகையில் மீண்டும் எங்கிருந்தோ ஏவப்படும் எறிகணை வேட்டுகளால் முதுகெலும்புவரை உடைக்கப்பட்டு நிமிர முடியாதவர்களாக மறுபடியும் மறுபடியும் அகதிகள் ஆனோம்.

Advertisment

எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள், துயரங்கள், அவலங்கள், இழப்புகள், பிரிவுகள். இதை எதையுமே வாய் திறந்து கூறமுடியாது. குரல் எடுத்து கதறி அழ முடியாது. சோகக்கதைகளை கேட்பார் யாரும் இல்லையே... என் விழிநீரை கேட்க யாரும் இல்லையே.... என்று ஏங்கி இருத்த வேளையில்தான்... இந்த சமூக சிற்பிகளுள் நானும் ஒருத்தியாக இணைவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

"யாழ்ப்பாணம் திறந்தவெளி சிறைச்சாலை' என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தில் சொல்லி யிருக்கிறேன். நான் பிறக்கும் முன்பு நடந்த கதை இது. என் அம்மா சொல்லிய கதை. என் சகோதரனை கதாநாயகனாக வைத்து கூறியிருக்கிறேன். போர்க்காலங்களில், அந்தக் கருப்பு நாட்களில் எம் மக்கள் அனுபவித்த இன்னல்கள், எமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள், உரிமை மீறல்களைக் சுட்டிக்காட்டியுள்ளேன்.

jayaprasanthiஇலங்கை ராணுவம் மட்டுமே எமக்கு அநீதிகளை இழைக்கவில்லை. காக்க வந்த காவல் தெய்வங்கள் என்று நாங்கள் நினைத்து, கையெடுத்துக் கும்பிட்ட இந்திய ராணுவமும் எம் மக்களை அழித்து ஒழித்துக் கையெடுத்துக் கும்பிட்ட எம்மக்களின் கரங்களுக்குள் குண்டுகளை வைத்தனர். துயரத்தில் இருந்து மீள நினைத்த மக்களின் கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கினைப் போட்டனர். கண்போல போற்றிய பெண்களின் கற்பை சூறையாடினார்கள். இலங்கை ராணுவத்தில் சிக்கித் தவித்த மக்களை இந்திய ராணுவம் "அமைதிப் படை' என்ற பெயரில் அழித்து ஒழித்ததுதான் வரலாறு. இந்தியப் படைகள் நாட்டைவிட்டு வெளியேறிய பின்பு அவலங்கள், அழுகைகள், பிரிவுகள், இழப்புகள்தான் எங்களின் நிரந்தர உறவுகளாகின. ஒரே வருடத்தில் 9 பள்ளிகள் மாறி கல்வி கற்ற அனுபவம் எங்களுக்கு உண்டு. மர நிழலிலேயே உண்டு உறங்கி வானமே கூரையாய், கட்டாந்தரையே பஞ்சணையாய் பதுங்கு குழியே தாய்மடியாய் வாழ்ந்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஊர் இழந்து, உறவு இழந்து, உடைமையை இழந்து விரல்பிடித்து நடைபழகிய அண்ணனை இழந்து, பள்ளியில் நண்பியை இழந்து, ஓடிப்பிடித்து விளையாடிய நண்பனை இழந்து, ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த ஆசானை இழந்து, பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையையும் அங்ககீனம் அடைந்து... இறுதியில் எங்கிருந்தோ வந்த எறிகணை தாக்கிட செட்டிகுளம் முகாமில் தஞ்சம் அடைந்தேன்.

Advertisment

இத்தனை ஆயிரம் துன்பங்களுக்கும் இலங்கை ராணுவமே காரணம் என்பதற்காக சிங்கள இனத்தை வெறுத்து வந்தேன். இன்று ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்று கூறப்பட்டாலும், அன்று போராட்டம் தொடங்க என்ன காரணம் இருந்ததோ... அதே காரணத்தில் மாற்றம் இல்லாமல் இன்னும் பிரச்சனை தொடர்கிறது. நாளுக்கு நாள் அரங்கேறிக்கொண்டிருக்கும் அரசியல் நாடகங்கள், வேலையில்லாப் பிரச்சினைகள், உரிமை மீறல் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் நாட்டில் என்றைக்கு தமிழ்-சிங்கள இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் பிறக்கிறதோ அன்றுதான் உண்மையான சமாதானமும் அமைதியும் பிறக்கும் என்பதை சமூகச் சிற்பிகள் மூலமாக இன்று புரிந்துகொண்டோம்'' என்றார் உருக்கமாக. அனுபவ வலிகளுடனான அவரது பேச்சு அனைவரையும் கலங்க வைத்தது.

"பி.யு.சி.எல்' அமைப்பின் தேசிய செயலாளர் சுரேஷ் பேசும்போது, ""இந்தியாவில் 22 மாநிலங்களில் பி.யு.சி.எல். அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வந்த பிறகு அனைத்து மாநிலத்திலும் இது குறித்து விவாதம் நடத்தப்படும்''’என்றார்.

இந்த நிகழ்வில் சமூக சிற்பிகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஷெரீன் சேவியர், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஆசிரியர் நக்கீரன் கோபால், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், வழக்கறிஞர் அருள்மொழி, ஊடகவியலாளர் ஜீவசகாப்தன், நூலின் ஆங்கிலப் பதிப்பு மொழிபெயர்ப்பாளர் விஜய சுப்பிரமணியன், நூல் தொகுப்பாளர் கௌரிஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, இந்த நூல் குறித்துப் பேசினர்.

பேசித் தீர்வதில்லை ஈழ மக்களின் மௌன வலி.